ஆதரவற்ற பிராணிகளையும் நேசிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் `விலங்குகள் மற்றும் மனிதர்களில் நாய்களின் மூலமாக பரவும் வெறிநோயினை தடுக்க முற்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள்' என்ற தலைப்பில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் 320 கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான வெறிநோய் வல்லுநர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.
தொடர்ந்து, செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை டாக்டர் ராணி கவுர் பானர்ஜி தொடங்கி வைத்து வெறிநோய்க்கான “ரேபீஸ் வெறிநோய் – கட்டுகதைகளும் உண்மைகளும்” என்ற விழிப்புணர்வு கையேடுகளை செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு வழங்கி வெறிநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த முகாமில் நாய், பூனை உள்ளிட்ட 250 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.என்.செல்வகுமார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் டீன் ஆர்.கருணாகரன், நோய் தடுப்பு மருத்துவத் துறையின் தலைவர் ம.விஜயபாரதி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசும்போது, “தெருக்களில் ஆதரவற்ற நிலையில் உள்ள நாய்கள் உள்ளிட்ட அனைத்து பிராணிகளுக்கும் உணவு அளித்து அடைக்கலம் கொடுத்து பராமரிக்க வேண்டும்.
விலங்குகளிலேயே நாய் மிகவும் நன்றி உணர்வு உள்ளது. எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து வந்த நாய் இறந்துவிட்டது. பலர் நாய்களை கொடுத்தார்கள். ஆனால், மறுத்துவிட்டோம். தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு ஆதரவு அளித்து பராமரிக்கிறோம்” என்றார்.