தேர்தல் தொடர்பான சோதனைகளின் போது, வணிகர்களிடம் தேவையற்ற கெடுபிடி கூடாது ; தேர்தல் பயன்பாட்டுக்கல்லாத பணத்தை உடனடியாக திருப்பியளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பணம் பறிமுதல் செய்தல், அவற்றை திருப்பியளித்தல் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது. குறிப்பாக, தேர்தலுக்கு அல்ல என தெரிந்தால் உடனடியாக பணத்தை திருப்பியளிக்க வேண்டும்; வணிகர்களிடம் கெடுபிடி செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பறிமுதல் செய்யப்படும் மற்றும் திருப்பியளிக்கப்படும் பணம் தொடர்பாக பறக்கும் படையினர், தபால் மூலம் எங்களுக்கு தகவல் அளிக்கின்றனர். இதனால் ஏற்படும் கால தாமதத்தை போக்க, புதிய கைபேசி செயலி உருவாக்கியுள்ளோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்களை பதிவு செய்தால், மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் தேர்தல் ஆணையரும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். தேர்தல் பறக்கும் படையினரைப் பொறுத்தவரை, ஒரே இடத்தில் இருக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். நிலையான கண்காணிப்புக் குழுவினரும் இடத்தை மாற்றி சோதனைப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.