திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் அவர் பேசும்போது, “ உள்ளாட்சி அமைப்பு என்பது மிகவும் பலம் பொருந்தியது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது என்பது காலத்தின் கட்டாயம். உரிய பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும். மக்களுக்கு ஊராட்சி பகுதிகளில் நேரடியாக குடிநீர், இலவச வீடு, ரேஷன் பொருட்கள் என, மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தேர்தலின்போது தொகுதி பங்கீடுஎன்பது ஒரு கடினமான பணி .சில இடங்களில் கூட்டணி கட்சியினரை எதிர்த்தே பாஜகவினர் போட்டியிடுவது தவிர்க்க முடியாத ஒன்று” என்றார்.
தொடர்ந்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல்பற்றி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட பாஜகதலைவர் மகாராஜன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம் ஆனை குளத்திலும் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.