தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, துறையூரைச் சேர்ந்த குருநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு 2013-ல் லோக்பால், லோக்- ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டப்படி மாநிலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பை 2014 டிசம்பர் மாதத்துக்குள் அமைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 2018-ல்தான் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது.
அதுவும் மத்திய அரசின் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டப்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் லோக்பால், லோக் ஆயுக்தா சட்ட விதிகளுக்கு முரணான முறையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யவும், அந்தச் சட்டம் மத்திய அரசின் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்துக்கு எதிரானது என அறிவித்தும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாகத் தலைமைச் செயலர், சட்டத்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.