தமிழகம்

களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ.14,600 பணம் பறிமுதல்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.14,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடி, திருநெல்வேலி மாவட்ட எல்லையில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி ஆகியவற்றின் வழியாக விதிமுறையை மீறி கல், மண், ஜல்லி உட்பட கனிம வளங்களைக் கடத்திச் செல்வதும், ரேஷன் பொருட்கள் கடத்திச் செல்வதும் அதிகரித்து வந்தன. இவற்றிற்கு சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் சில போலீஸாரே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும் அவற்றில் சிக்காமல் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள், ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையிலும், விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர்பால் தலைமையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புகுந்தனர். இதைப் பார்த்து அங்கு பணியில் இருந்த போலீஸார் பதற்றமடைந்து, தங்கள் கையில் இருந்த பணத்தைப் பக்கத்து அறையில் வீசி எறிந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பணத்தைச் சுருட்டி, ரப்பர் போட்டுக் கட்டி வைத்திருந்தனர். அதில் மொத்தம் ரூ.14,600 கணக்கில் வராத பணம் இருந்தது.

பணம் குறித்து அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செய்யது உசேன் மற்றும் போலீஸாரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பணம் குறித்து முரணான தகவல்களைத் தெரிவித்ததுடன், உரிய பதிலை அளிக்க முடியாமல் திணறினர். இதனால் அவை சோதனைச் சாவடியைக் கடந்து கேரளாவிற்குச் செல்லும் கனிமவளங்கள் ஏற்றிய வாகனங்கள் மற்றும் அதிக பாரம், விதிமுறையை மீறிச் செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் இருந்து லஞ்சமாக வசூல் செய்யப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

காலை 9 மணி வரை இந்த சோதனை நடந்தது. களியக்காவிளை சோதனைச் சாவடியில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது பணியில் இருந்த எஸ்.ஐ. செய்யது உசேன், எஸ்.எஸ்.ஐ. முத்து, ஏட்டு அசோக்குமார் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கு போலீஸார் வாகனப் பதிவு செய்யும் அலுவலகம், போலீஸார் ஓய்வெடுக்கும் அறை, சோதனை நடத்தும் பகுதி ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். இங்கும் காலை 9 மணி வரை சோதனை நடைபெற்றது.

SCROLL FOR NEXT