பிஎம் கேர்ஸ் நிதியில் நடந்திருக்கும் மோசடி, தனிநபர் மோசடியை விடப் பெரிய மோசடி. அந்த நிதியை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று தருமபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’கரோனா காலத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக வருவாய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, குடும்பம் ஒன்றுக்கு ரூ.7,500 வீதம் மத்திய அரசு தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் கரோனா கால நிதியுதவி வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் நிதி நெருக்கடி சூழலில் தவிக்கும்போது இவ்வாறு நிதியுதவி வழங்குமாறு கூறியுள்ள அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்துக்குரியது. திமுக அரசு ஏற்கெனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4,000 நிதியுதவி அளித்துள்ளது.
தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலான வரவேற்புக்குரிய திட்டம். கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் ஆகியோரைத் தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அல்லது அரசுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண விகிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாகத் தமிழக முதல்வர் தலைமையில் குழு அமைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கான விலையில் தனது பங்காக லிட்டருக்கு ரூ.3 விலையைக் குறைத்துள்ளது. அதுபோலவே, மத்திய அரசு எரிபொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் பணிக் காலத்தை 200 நாட்களாக்கி, அதற்கான ஊதியத்தை நாளொன்று ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இதன் மூலம் 1 கோடி விவசாயத் தொழிலாளர்கள் பயனடைவர்.
பிரதமர் கேர் நிதியில் நடந்திருக்கும் மோசடி, தனிநபர் மோசடியை விடப் பெரிய மோசடி. இந்த நிதி கணக்கில் வராதது, தணிக்கை வரம்பிலும் வராது எனக் கூறுகின்றனர். இதுவரை அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. இந்த நிதி தொடர்பாக வரவு, செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த நிதி முழுவதையும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
ஹெச்.ராஜா தொடர்ந்து தலைவர்களை, பத்திரிகையாளர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாட்டின் நலன் கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு திட்டத்துக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக பாஜகவினர் கூறுகின்றனர். பாஜகவினர் பேசும் அனைத்தும் பொய்யானவை’’.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தேவராசன், முன்னாள் எம்எல்ஏ நஞ்சப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.