பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரில் காணாமல்போன தமிழக இளைஞரை கண்டுபிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயரம் நிகழ்ந்தபோது அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளரை காணவில்லை என தகவல் வந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, காணாமல் போன தமிழக இளைஞரை கண்டுபிடிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.