வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், விவசாயிகளுக்கு 1 லட்சம்மின் இணைப்பு திட்டம் ஆகியவற்றுக்காக விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வருக்கு ஜனவரியில் பாராட்டு விழா நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினை காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கே.வி.இளங்கீரன் கூறியதாவது:
தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் முதல்வரை சந்தித்தோம். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது மற்றும் ஆட்சி அமைத்த 100 நாட்களில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.
முதல்வரிடம் கோரிக்கை
காவிரி டெல்டா பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் குறுகியகால கடனை, மத்திய கால கடனாக கடந்த ஆட்சியில் மாற்றி அமைத்தனர். ஆனால், தற்போதைய கடன் தள்ளுபடி திட்டத்தில், இந்த கடன்கள் சேர்க்கப்படவில்லை. மத்திய கால கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, 3 வேளாண் சட்டங்களையும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள முதல்வர், அவற்றை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டோம். ஜனவரியில் தேதி தருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.