காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற் பூங்காக்களும், குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்புப் பூங்காக்களும் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், இந்த நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் பூங்காவில், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி வேண்டி, மத்திய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழக அரசு சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்று, தற்போது தேசிய அளவில் நான்கு மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்காக்களை அமைக்க, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமையும்.
இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, அதிகபட்சமாக ரூ.100 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும்.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 350 ஏக்கர் பரப்பில், சுமார் ரூ.450 கோடி திட்ட மதிப்பில், அடிப்படைக் கட்டமைப்புகள், ஆய்வுக் கூடங்கள், முன்னோடி மாதிரி மையம், திறன் மேம்பாட்டு மையம் முதலியவற்றை உள்ளடக்கி, ஒரே குடையின்கீழ் பல்வேறு வசதிகள் கொண்ட பூங்காவாக இது அமையும்.
மருத்துவத் துறையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வெண்டிலேட்டர்கள், பி.பி. திரைகள், பேஸ்மேக்கர்கள், அறுவைசிகிச்சை உபகரணங்கள், கண் மற்றும் பல் உள்வைப்புகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பூங்கா அமையும்.
இது ரூ.3,500 கோடி முதலீடுகளை ஈர்ப்பதுடன், 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும்.
மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும் இந்தப் பூங்கா, சர்வதேச தரத்தில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும். மேலும், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியிலும் உலக அளவில் முக்கியமான உற்பத்தி மையமாக இது உருவாகும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.