தமிழகம்

தேர்தல் பணிக்கு தடுப்பூசி சான்று கட்டாயம்?- முகவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம்

செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மைய முகவர்களுக்கு தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படும் என்று கருதப்படுவதால், முகவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கிராமப்பகுதிகளில் இலக்கு நிர்ணயித்து, கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால், ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பலர் கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக பணியாற்ற உள்ள நபர்கள், கரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மேற்கண்ட மையங்களில் அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இதனால், முகவர்களாக பணியாற்ற உள்ள நபர்கள் பட்டியலில் தங்கள் பெயரை இணைப்பதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதால், சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் தவணையாக 10.88 லட்சம் பேர், 2-ம் தவணையாக 4 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

தற்போது தேர்தலுக்காக பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் பலர் மது அருந்திய நிலையில் முகாமுக்கு வந்து தடுப்பூசி போடுமாறு வாக்குவாதம் செய்கின்றனர். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அன்று மது அருந்தக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT