தமிழகம்

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ‘சார்ஜிங் மையங்கள்’ அமைக்கமத்திய மின் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, சார்ஜிங் மையங்களை அதிக அளவில் அமைக்குமாறு மத்திய மின்துறை அறிவுறுத்தி உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதனால், தனியார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனம், மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு மின்சார வாகனங்களை வாடகைக்கு வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சார்ஜிங் மையத்தை அமைத்துள்ளது. வாகனங்களை சார்ஜிங் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.11 முதல்ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், 40 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை வசிக்கும் நகரங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சென்னை நகரமும் இடம் பெற்றுள்ளது. தமிழக மின்வாரியமும் மின்சார வாகனங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது,

இதனிடையே, மத்திய மின்துறை உயர் அதிகாரிகள், தமிழகம் உட்பட பல்வேறு மாநில மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ. தொலைவுக்கு ஒரு சார்ஜிங் மையமும், மாநகராட்சி பகுதிகளில் 3 கி.மீ. தொலைவுக்கு ஒரு மையமும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT