தமிழகம்

வில்லிவாக்கம் 200 அடி சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு: மேலும் 7 பேர் படுகாயம்; பொறியியல் கல்லூரி மாணவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை வில்லிவாக்கம் 200 அடி சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், தடுப்புச் சுவருக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்த 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த சிறுவன் உள்ளிட்ட 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை வில்லிவாக்கம் தாதான்குப்பம் 200 அடி சாலையில், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலையின் தடுப்புச் சுவருக்கு (சென்டர் மீடியன்) கருப்பு-வெள்ளை வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களை ஏற்றி வந்த லோடு வேனை தடுப்பு சுவர் ஓரம் நிறுத்திவிட்டு, அதன் முன்பு நின்று வர்ணம் பூசிக்கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலையில் ரெட்டேரியிலிருந்து பாடி நோக்கி வேகமாகவந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி ஓடியது.

அப்போது அங்கிருந்த லோடுவேன் மீது மோதிய கார், வர்ணம்பூசிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் மோதியது.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சசிகலா(27), செஞ்சி நாகலாம்பட்டு பகுதியைச் சேர்ந்த காமாட்சி(25) ஆகிய இரு பெண்தொழிலாளர்கள், அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த இருவரது உடல்களையும், பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், விபத்தைஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெரம்பூர் சிவகாமி தெருவைச் சேர்ந்த சுஜித்(19) என்ற மாணவரைக் கைது செய்துள்ளனர். இவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். விபத்தின்போது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

சுஜித், தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது, விபத்து நேரிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் ஆவடி ராதா (32), திருவண்ணாமலை அம்சவள்ளி (40), மலர் (33), மூர்த்தி (30), சத்யா (26),முருகேசன் (30), சிறுவன் கவுதம்(10) ஆகியோருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு விபத்து

இதேபோல, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதியதில், தனியார் கல்லூரி மாணவர் ரஞ்சித்குமார் (19)உயிரிழந்தார். இந்த விபத்து குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT