தமிழகம்

முதல்வர் அறிவித்துள்ளது போல் 202 திட்டங்களில் எதுவும் மக்களை சென்றடையவில்லை: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் குருவிகுளம்ஒன்றியத்தில் உள்ள இளையரசனேந்தலில் அதிமுக சார்பில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பானஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலெட்சுமி, எம்எல்ஏக்கள் கடம்பூர் செ.ராஜு, கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, ஒன்றிய செயலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பேசினர்.

பின்னர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். 202 வாக்குறுதிகள் என்பது, வெங்காயத்தை உரித்தால் அதன் தோலும், கண்ணீரும் தான் மிச்சம் என்பது போல வேறுஒன்றுமில்லை. 202 திட்டங்களில்எதுவும் மக்களை சென்றடையவில்லை.

தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை தான் அவர்கள் தொடர்ந்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தான் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உள்ளன.

அக்.3-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பிரச்சாரத்துக்கு வருகை தர உள்ளார். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை, 100 சதவீத வெற்றியை அதிமுக பெறும்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர் நடுநிலையோடு இருக்க வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளோம், என்றார் அவர்.

SCROLL FOR NEXT