திருச்சியில் மேம்படுத்தப்பட்டு வரும் சத்திரம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பயன்பாட்டுக்கு வரும்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா? என்பது சந்தேகம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏற்பட்ட இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கான இடர்பாடு ஆகியவற்றை போக்கும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.34 கோடியில் 2.93 ஏக்கரில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 285 பேருந்துகள் தினமும் 4 நடைகள் வீதம் 1,140 நடைகள் வந்து செல்கின்றன. இந்த இடத்தில், பகுதி 1-ல் 15 பேருந்துகளும், பகுதி 2-ல் 14 பேருந்துகளும் என ஒரே நேரத்தில் 29 பேருந்துகளை நிறுத்த முடியும். தரைத் தளத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், தரை மற்றும் முதல் தளத்தில் கடைகள், பயணிகள் ஓய்வு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறைகள் உள்ளிட்டவை அமையவுள்ளன. இப்பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், மேம்படுத்தப்படும் சத்திரம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, அதன் நோக்கம் நிறைவேறுவது சந்தேகம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சாலைப் பயனீட்டாளர் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.அய்யாரப்பன் கூறியது:
ஒவ்வொரு பேருந்தும் பேருந்து நிலையத்துக்குள் வந்து 3 நிமிடங்களுக்குள் புறப்பட்டு விட வேண்டும்.
ஆனால், பேருந்துகளை நிறுத்துவதற்கு அமைக்கப்பட்ட ‘ப’ வடிவிலான இடத்தில்(Bay), பேருந்துகளை நிறுத்தி விட்டு, மீண்டும் எடுக்கும் போது போதிய இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழையும் இடத்தில் சறுக்குப்பகுதி உயரமாக இருப்பதால், பேருந்துகள் சற்று வேகமாக வந்துதான் நுழைய வேண்டி இருக்கும். இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அதேபோல, நடைமேடைகளும் உயரமாக இருப்பதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமத்துக்குள்ளாவார்கள். இதனால், பேருந்து நிலையம் அமைக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, “பேருந்து நிலையப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், குறைகளைக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. வல்லுநர்களின் ஆலோசனையின்படி மேம்படுத்தப்பட்டு வரும் இந்தப் பேருந்து நிலையம் அது கட்டப்படுவதன் நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும்’’ என்றனர்.