கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாவட்டந்தோறும் திங்கள்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (28-9-2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், அரசு ஆணை எண்.552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.09.2021ன்படி, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31.10.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.