தமிழகம்

விருப்பமுள்ள நிறுவனங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு உதவலாம்: வரிவிலக்கு உண்டு

செய்திப்பிரிவு

விருப்பமுள்ள நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதி மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு உதவலாம் என்று நிர்வாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

​''அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இப்பூங்கா உலகம் முழுவதிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. கரோனா பெருந்தொற்று நோயானது இயற்கையுடன் இணக்கமாக வாழவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும், வாழ்க்கையையும் அதன் மதிப்பையும் கற்றுத் தந்துள்ளது.

​அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களில் 2,382 விலங்குகள் உள்ளன. அவற்றுக்குச் சிறந்த பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. பூங்காவிலுள்ள விலங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பில் எந்தவிதக் குறைபாடு இல்லாமல் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்கிறோம். கோவிட்- 19 தொற்று நோயினால் உயிரியல் பூங்கா சுமார் 8 மாதங்கள் மூடப்பட்டிருந்தன.

பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்சப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளச் சிக்கல் எழுந்தது. 2020- 21ஆம் ஆண்டில் ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்தியா லிமிடெட், ஒரகடம் உயிரியல் பூங்காவின் நிதிப் பற்றாக்குறை தருணங்களில் பூங்காவில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, உதவிக்கரம் நீட்டியது.

​CSR செயல்பாடுகள் மூலம் ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்தியா லிமிடெட், ஒரகடம் உயிரியல் பூங்காவிற்கு விலங்கு தகவல் பலகைளைப் புதுப்பிக்கவும், விலங்குகள் ஓய்வெடுக்க கொட்டகைகள், சோலார் தெருவிளக்குகள், 14 நபர்கள் அமரும் மின்கல ஊர்திகள் ஆகியவற்றை 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கியுள்ளது. இந்த வசதிகள் விலங்குகளுக்குத் தரமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையும் வழங்குவதோடு, பார்வையாளர்களுக்குக் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளது.

​28.09.2021 அன்று NEOGI தெபாஷிஷ், மேலாண் இயக்குநர், RNTCBI, ராமகிருஷ்ணன் இராமநாதன், துணைத்தலைவர் (CSR – தலைவர்), RNTCBI மற்றும் RNTCBI-ன் மூத்த நிர்வாகிகள் பூங்காவிற்கு வருகை தந்து வன உயிரின அவசர கால ஊர்தியைப் பூங்கா இயக்குநர் வசம் அன்பளிப்பாக அளித்தனர். மேலும் அவர்கள் வருகையினை நினைவுகூரும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினப் பாதுகாப்புக்காகவும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கடினமான கோவிட் காலங்களில் வருவாய் குறைந்த நிலையில் உயிரியல் பூங்காவைச் சமாளிக்க CSR நிதியானது உதவிகரமாக இருந்தது. HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் 2020- 21ஆம் ஆண்டில் CSR-ன் நிதியின் மூலம் ரூ.1.60 கோடியை வழங்கியுள்ளது. இத்தொகையானது இரண்டு மாதத்துக்கான உணவு மற்றும் விலங்குகளைப் பராமரிக்க, பூங்கா நிர்வாகத்திற்கு உதவிகரமாக அமைந்தது.

இதுபோன்று மற்ற பிற நிறுவனங்களும் உயிரியல் பூங்காவிற்கு CSR செயல்பாட்டு மூலம் பூங்கா நிர்வாகத்திற்கு ஆதரவு தர முன்வரலாம். இதற்காக support@aazp.in-க்கு மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது 044-29542301 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் பெருவாரியான மக்கள் மற்றும் பெருநிறுவனங்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்திற்காகப் பெறப்படும் நிதிக்கு, வருமான வரிச்சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் சென்னை DCKAP இ-காமர்ஸ் நிறுவனம், உலக காண்டாமிருக தினத்தில் ஒரு இணை காண்டாமிருகங்களை ஆறு மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ‘விஷ்ணு’ என்ற சிங்கத்தையும் ‘பிரக்ருதி’ என்ற யானையையும் ஆறு மாத காலத்திற்குத் தத்தெடுத்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைத் தத்தெடுத்து விலங்குகள் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பூங்கா இணையதளத்தை அல்லது இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்’’.

இவ்வாறு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT