வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், "சென்னை பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் கோச்சார் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறது. வட்டிக்குப் பணம் கொடுக்கும் இந்த நிறுவனம், சரியாக வட்டி கட்டாதவர்களிடம் இருந்து நிலங்களை அபகரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிதி நிறுவனம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்து வருவதாக, அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது. புகாரின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப். 28) சோதனை நடத்தினர்.
கோச்சார் நிறுவனத்தின் உரிமையாளர் தன்ராஜின் எழும்பூர் வீடு, வேப்பேரியில் உள்ள மற்றொரு வீடு, பாரிமுனையில் உள்ள அலுவலகம் என, 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.