தமிழகம்

வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க சென்னையில் 3 சிறப்பு மையங்கள்

செய்திப்பிரிவு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்காக 3 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குமாறு பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்குவதற்காக சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வடசென்னை வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திலும், மத்திய சென்னை பகுதி வாக்காளர்களுக்கு மண்டலம்-8, சென்னை மாநகராட்சி அலுவலகம், பழைய கதவு எண்.12பி, புதிய கதவு எண் 36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர் மற்றும் தென்சென்னை வாக்காளர்களுக்கு மண்டலம்-13, சென்னை மாநகராட்சி அலுவலகம், கதவு எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர, சென்னையில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இவை வழங்கப்படும். பொதுமக்கள் ரூ.25 செலுத்தி 001டி என்ற விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்தால் 3 நாட்களுக்குள் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்'' என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT