மாரடைப்பு வருவதற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்றாக உயர் ரத்த அழுத்த நோயும் இருக்கிறது என்று ‘நலமாய் வாழ…’ சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் இதயவியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
‘நலமாய் வாழ’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உலக இதய தினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், வெங்கடேஸ்வரா மருத்துவமனைகள் இணைந்து ‘இளம் வயதில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு’ குறித்த ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
இதில் புகழ்பெற்ற இதயவியல் மருத்துவரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனைகளின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர்சு.தில்லை வள்ளல், பொதுமருத்துவ எம்.டி மற்றும் இதயவியல் நிபுணரான டாக்டர் டி.சுபாஷ் சந்தர் ஆகியோர் கலந்துகொண்டு பேசியதாவது;
டாக்டர் சு.தில்லை வள்ளல்: உயர் ரத்த அழுத்தம் என்பது ஒருசைலண்ட் டிசீஸ். இந்த நோய்இந்தியாவில் 20 கோடி மக்களைப்பாதித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ரத்த அழுத்தமானது 120/80 என்று இருப்பது நார்மல். இந்த அழுத்தம் 200 என்ற அளவுக்குசென்றாலும் 60 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்குத் தான் அதற்கான அறிகுறிகள் இருக்கும்.
நாம் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே பலரும் பெரிய அளவில் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மாரடைப்பு வருவதற்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று இந்த உயர் ரத்த அழுத்தமாகும். மனித உயிரிழப்புகளை உண்டாக்கும் நோய்களில் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், கேன்சரைத் தொடர்ந்து ரத்த அழுத்த நோயும் இருக்கிறது.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினருக்கு உயர்ரத்த அழுத்த நோயின் தாக்குதல்இருக்கிறது. 30 சதவீதத்தினருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. 60 சதவீதத்தினருக்கு ஹைகொலஸ்ட்ரால் இருக்கிறது. மக்களிடம் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வும், அதற்கான பரிசோதனை மையங்களும் இருப்பதுபோல் ரத்த அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு இல்லை. அதற்கான பரிசோதனை மையங்களும் இல்லை. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும், ரத்தஅழுத்த நோய்க்கான முறையானசிகிச்சை முறையை மேற்கொள்வதன் மூலமாகவும் இளைய வயதினர் இந்த நோயின் தாக்குதலிலிருந்து நிச்சயம் விடுபட முடியும்.
டாக்டர் டி.சுபாஷ் சந்தர்: நமதுவாழ்வியல் முறை மாற்றங்களாலேயே இன்றைக்கு இதயவியல் தொடர்பான நோய்களின் தாக்கம்அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் நடைபெற்ற ஆய்வொன்றில், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குகுறைவாகவும், 8.30 மணி நேரத்துக்கு அதிகமாகவும் தூங்குபவர்களுக்கு இதய நோய், ரத்த அழுத்த நோய், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டறிந்து உள்ளனர்.
பொதுவாக இரவு நேரங்களில் தூங்குவதுதான் சிறப்பானது. இரவு நேர பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உண்டாவதை பார்க்க முடிகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற நோய்களை நமது வாழ்க்கை முறை கட்டுப்பாடுகளால் சரிசெய்ய முயல வேண்டும். இல்லையென்றால் இதற்கென உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.
முதலில் நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ரத்த அழுத்தநோயால் பாதிக்கப்படாத ஒருவர்ஒரு நாளைக்கு 5 கிராம் அளவேஉப்பை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்துஉடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் மிகவும் அவசியம். ரத்தஅழுத்த நோய் வந்த ஒருவர், ஒருவருடத்துக்குள் உணவு கட்டுப்பாட்டாலும், உடற்பயிற்சியினாலும் தனது உடல் எடையில் 10 சதவீதஎடையை குறைத்தால், மருந்து,மாத்திரைகளை குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பதிலளித்தனர்.
இந்த நிகழ்வை ‘இந்து தமிழ்திசை’யின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை காணத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.