தமிழகம்

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் உடனடியாக தீர்வு காண வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணமுதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் துணித் தொழிலை சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். இதன் விற்பனையகங்களில் பல ஆண்டுகளாக இரவு 8 மணி வரை இருந்த பணி நேரம் தற்போது இரவு 9 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொலைவில் இருந்து பல பேருந்துகள் மாறி பணிக்கு வரும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் 9 மணிக்கு மேல் பேருந்துகள் கிடைக்காமல் பெண்கள் அவதிப்படுகின்றனர் என்று செய்தி வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதிகள்இல்லை. தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவது இல்லை. பெண்ஊழியர்களிடம் சில அதிகாரிகள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகின்றனர். விற்பனை சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் முதல்வர், கைத்தறித் துறை அமைச்சர், தலைமைச் செயலரிடம் மனுக்கள் அளித்தும், பயன் இல்லை என்பதால், கோ-ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் அக்டோபர் 5-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அப்படியும் தீர்வு கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நிதி தொடர்பான கோரிக்கைஇல்லாத சூழலில், அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண்பதும், போராட்ட அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் மாநில அரசின் கடமை. எனவே,முதல்வர் இதில் உடனே தலையிட்டு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT