பராமரிப்பு இல்லாத `தமிழ்நாடு ஹோட்டல்'களை ஆய்வுசெய்து, அவற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து `சுற்றுலாத் துறையில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள்' குறித்த கருத்தரங்கம் மற்றும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதிய திட்டங்களின் தொடக்க விழாவை, அமைச்சர் மதிவேந்தன் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா ஊரடங்கால் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா தலங்களில் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் சில தமிழ்நாடு ஹோட்டல்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அனைத்து தமிழ்நாடு ஹோட்டல்களையும் முறையாக ஆய்வுசெய்து தரம் உயர்த்தவும், புதுமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, சுற்றுலாத் துறை வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். மேலும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மற்றும் அதிகாரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ என்ற திட்டத்தின்கீழ், சுற்றுலா வளர்ச்சிக் கழகப் பேருந்து மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணம் மேற்கொள்ளும் சமூக ஊடகவியலாளர்களின் வாகனத்தை சென்னை தீவுத்திடலில் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.