தமிழகம்

தோல்வி பயத்தால் அதிமுகவினரின் வேட்புமனுக்களை நிராகரிக்கும் திமுகவினர்: ஈபிஎஸ்

என்.முருகவேல்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர், முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுவினரின் மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக 525 வாக்குறுதிகளைக் கூறினார். அதில் ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் திமுக அமைச்சர்கள் 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றியதாக கூறி வருகிறார்.

ஆனால் நீட் தேர்வு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000, முதியோர் உதவித் தொகை உயர்வு, 100 நாள் வேலை உறுதித் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. திமுகவினர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பாளர்கள், ஆனால் நிறைவேற்றமாட்டார்கள். அவர்கள் எப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள்? ஆனால் அதிமுகவைக் குறை சொல்லியும், பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் வெற்றி பெற்றுவிட்டனர்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் பயில ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, கொண்டுவந்து, கடந்த ஆண்டு 412 மாணவர்களை மருத்துவம் பயிலச் செய்துள்ளது. குடிமராமத்துப் பணி மூலம் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

விவசாயிகள் மீது போதிய அக்கறையில்லாத அரசுதான் திமுக அரசு. அதனால்தான் நெல் கொள்முதல் நிலையங்களில் வைப்பட்டுள்ள 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் முறையாக வேட்பு மனுக்களைப் பூர்த்தி செய்து வழங்கியுள்ளார்கள். ஆனால் திமுகவினரின் தோல்வி பயத்தின் காரணமாக அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதற்காகத் தேர்தல் நடத்தவேண்டும்? ஆனால் தில்லுமுல்லு செய்தாவது தேர்தலை நடத்தவேண்டும் என்பது திமுகவினரின் எண்ணம். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரையும் விடமாட்டோம். எனவே தேர்தல் நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை அதிமுகவினர் விழிப்போடு இருக்க வேண்டும்''.

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT