தமிழகம்

செல்போன் பேசுவதைக் கண்டித்த பெற்றோர்: தூக்கிட்டுத் தற்கொலை செய்த மகன்  

என்.சன்னாசி

செல்போனில் நீண்ட நேரம் பேசுவதைப் பெற்றோர் கண்டித்ததால், மதுரையில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழைய விளாங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரான்சிஸ் எபினேசர் (17). பிளஸ் 2 வரை படித்த இவர், வீட்டில் இருக்கும்போது பெரும்பாலான நேரத்தில் செல்போனைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதைக் கண்டு அவரது பெற்றோர் எச்சரிக்கை விடுத்து, கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எபினேசர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பியபோது, மகன் தூக்கில் பிணமாகத் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த கூடல் புதூர் போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதிக நேரம் செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர் கண்டித்ததால் விரக்தியில் பிரான்சிஸ் எபினேசர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT