ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்தவுடன் 4 மாதங்களில் நகர்ப்புறங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (செப். 27) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி வரவேற்றார். ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தேவராஜ் முன்னிலை வகித்தார். தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
"ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் முடிந்த உடன், நகர்ப்புறங்களுக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிதாக நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வார்டு வரையறைப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் முடிந்தவுடன் நகர்ப்புறங்களுக்கான தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. அதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். தேர்தல் நடைபெறும் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்யாத பல பணிகளை திமுக அரசு கடந்த 4 மாதங்களில் செய்துள்ளது. இதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை திமுக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றும்".
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.