தமிழகம்

மக்களுக்குப் பணியாற்றுகிற அரசாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

மக்களுக்குப் பணியாற்றுகிற அரசாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் இன்று (செப். 27) நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் 75ஆம் ஆண்டு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"இன்றைக்குத் தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு. நான் பலமுறை, அடிக்கடி எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது, எனது அரசு என்று நான் சொல்லமாட்டேன் அல்லது எங்களுடைய அரசு என்று கூறமாட்டேன். இது நம்முடைய அரசு.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோது பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்தபோது நான் அப்போது செய்தியாளர் இடத்தில் சொன்னேன், அமையவிருக்கக்கூடிய ஆட்சி மக்களுக்குப் பணியாற்றக்கூடிய ஆட்சியாக அமையும், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து என்னுடைய பணி அமையும்.

இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்கத் தவறியவர்கள், இந்த ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் இருந்துவிட்டோமோ என்று வருந்தக்கூடிய அளவில் இந்த ஆட்சி அமையும் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

தேர்தல் நேரத்திலே போட்டியிடக்கூடிய கட்சிகளெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம். ஆனால், திமுகவைப் பொறுத்தவரையிலே, சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அந்த 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகளில் இன்றைக்கு 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கம்பீரமாக இந்த நேரத்தில் சொல்கிறோம்.

ஆகவே, மக்களுக்குப் பணியாற்றுகிற அரசாக, உங்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கக்கூடிய அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT