தமிழகம்

பள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை

செய்திப்பிரிவு

குழந்தைகளின் கற்றல் பாதிப்பை சரிசெய்ய பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைவிஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 68 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. அதனால், கரோனா 3-வது அலை குறித்த அச்சத்தை மக்கள் தவிர்க்கவேண்டும். முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கைகழுவுதல், தடுப்பூசி போடுதல்ஆகிய வழிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முறையாக பின்பற்றினால் நோய் பரவலை கட்டுக்குள் வைக்க முடியும். 3-வது அலை உருவாவதையும் தடுக்கலாம்.

கரோனா 3-வது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதில் உண்மை இல்லை.

பள்ளிகள் முழுமையாக அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்படாததால், குழந்தைகளின் கற்றலில் சுமார் 20 மாத காலம் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு தொலைதொடர்பு வசதிகள் இல்லாததால், இணையவழி கல்வி அனைவருக்கும் பயன் அளிக்காது. எனவே, பள்ளிகளை திறப்பது அவசியம்.

பள்ளிக்கு செல்வதால் கரோனா பரவுகிறது என்பது தவறான தகவல். பள்ளிகளைவிட வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதால்தான் சமூக பரவல் மூலம்குழந்தைகள் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT