தமிழகம்

சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள்: கட்சி கொள்கைகளை பேச வேண்டும் - மாவட்ட தேர்தல் நிர்வாகம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தேர்தலுக்காக அச்சிடப்படும் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்களில், கட்சிகளின் கொள்கைகளை பேசும் வாசகங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், தேர்தலுக்காக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுவோர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் பங்கேற்று பேசியதாவது:

தேர்தலுக்காக அச்சிடப்படும் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்களில் அச்சகத்தார், பதிப்பாளர் பெயர், முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப் படும் படிவம் ஏ, பி ஆகியவற்றை பூர்த்தி செய்து, அச்சிடப்பட்டதன் மாதிரியுடன் சேர்த்து மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். படிவம் ஏ-ல் அச்சகத்தார், பதிப்பாளர் கையொப்பமிட்டு, இரு நபர்கள் சான்றொப்பம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வேட்பாளரின் செலவினத்தை கணக் கிட வசதியாக இருக்கும். சுவரொட்டி போன்றவற்றில் சர்ச்சையை ஏற்ப டுத்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்து, அது தொடர்பாக புகார்கள் வந்தால், விசாரிக்கவும் ஏதுவாக இருக்கும். பேனர், சுவரொட்டி, துண்டு பிரசுரங்களில் மோசமான வாசகங்கள் இடம்பெறக் கூடாது. அதில் கட்சியின் கொள்கைகள் மட்டுமே இடம்பெற வேண்டும். விதிகளை மீறினால் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

விதிமுறைகளுக்கு எதிர்ப்பு

இக்கூட்டத்தில் பங்கேற்ற திரு.வி.க.நகரைச் சேர்ந்த சங்கீதா டிஜிட்டல் உரிமையாளர் எச்.வெங்கடேசன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அச்சகத்தார், பதிப்பாளர் பெயர்கள், முகவரி ஆகியவை இடம்பெறுவதை வரவேற்கிறோம். பதிப்பாளரை கையொப்பமிட சொல்வது, இரு நபர் சான்றொப்பம் செய்வது, அவற்றை தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றை செய்ய நேரமும் இல்லை, போதிய ஆட்களும் இல்லை. தேர்தல் தொடர்பாக எதையும் அச்சிடுவதில்லை என எனது அலுவலகத்துக்கு வெளியே, அறிவிப்புப் பலகை ஒன்றை வைக்க இருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT