தமிழகம்

‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடுவது குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: சுகாதாரத் துறைச் செயலர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் பாலாஜி உடனிருந்தார்.

பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதுவரை 4.43 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 3.4 கோடி பேர் முதல் தவணையும், 1.03 கோடி பேர் 2-வது தவணையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

குடும்ப நிகழ்ச்சிகளால் பரவல்

பெரும்பாலான தொற்று பாதிப்பு, குடும்ப நிகழ்ச்சிகள் மூலமே ஏற்படுகிறது. குறிப்பாக, அரியலூர், கடலூர், சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல், நீலகிரி, தேனி மாவட்டங்களில் பணி நிமித்தமாக வெளியில் செல்பவர்களாலும், நாகை, விழுப்புரம், விருதுநகர்மாவட்டங்களில் பொழுபோக்குஇடங்களுக்குச் செல்பவர்களா லும், கரூர், திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் வேலைக்குச் செல்வோராலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

சென்னையில் பணி சார்ந்தநிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குகள் போன்றவற்றால் தொற்று சற்று அதிகம் உள்ளது. 60 வயதைக் கடந்த 86 லட்சம் பேருக்கு தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 41.78 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். வீடு தேடிவந்து, முதியோருக்கு தடுப்பூசி போடப்படுவதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

‘பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடுவது குறித்து ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலைப் பின்பற்றியே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்றுநடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தற்போது கரோனா தொற்றில் கவனம் செலுத்திவரும் நிலையில், தொற்றா நோய்கள் குறித்தும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் கூறினார்.

SCROLL FOR NEXT