கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ள,கூட்டுறவு சார் பதிவாளர், நகைமதிப்பீட்டாளர் உள்ளிட்டோர் அடங் கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் ஆய்வை முடித்து, நவ. 20-ம் தேதிக்குள் பதிவாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 40 கிராம் வரை வழங்கப்பட்ட பொது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், நகைக் கடன்கள் வழங்கியதில் பல்வேறுமுறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகைக் கடன்களையும் 100 சதவீத ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.
கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலுவையில் இருந்த பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வு செய்வதுடன், ஏப்ரல் 1-ம் தேதி முதல்ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மண்டல இணைப் பதிவாளர்கள், ஆய்வுக்குத் தேவையான நகைமதிப்பீட்டாளர் உள்ளிட்ட ஆய்வுக்குழு உறுப்பினர் பட்டியலை, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற மண்டலத்துக்கு அனுப்ப வேண்டும்.
சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை, நகைக் கடன் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களும், சார் பதிவாளா், மத்தியகூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
இந்த ஆய்வுக் குழுக்கள், வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் ஆய்வுப் பணியை முடித்து, சரக துணைப் பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். துணைப் பதிவாளர்கள் சரகம் வாரியாக அறிக்கைகளை தொகுத்து, மண்டல இணைப்2 பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
சென்னை மண்டலத்தில் ஆய்வறிக்கைகளை கூடுதல் பதிவாளர் பெற வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் இவ்வாறு பெறப்பட்ட அறிக்கைகளை நவ. 20-க்குள்பதிவாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.