தமிழகம்

இன்று உலக சுற்றுலா தினம்- கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?

செய்திப்பிரிவு

கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத் துறை, வனத் துறை, தோட்டக்கலைத் துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகள் சார்பில் பல திட்டங்கள் உள்ளன. வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ‘ஸ்கை வாக்’ அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. மலைப் பகுதியில் கண்ணாடி பாலம் மீது நடந்து செல்வது தான் ஸ்கை வாக். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேபோன்று, பைன்பாரஸ்ட் பகுதியில் ‘டிரீ வாக்’ என மரங்களுக்கு இடையே தொங்குபாலம் போல் மரப்பலகைகளால் அமைத்து, சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று இயற்கையை ரசிக்கும் திட்டமும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை.

சுற்றுலாத் துறை சார்பில் நகரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிவதை தடுக்க மலை கிராமப் பகுதிகளில் உள்ள இயற்கை எழில் சார்ந்த இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அடுக்கு மாடி கார் நிறுத்தம் கொண்டு வரப்படும் என அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கான செயல்திட்டம் ஏதும் தொடங்கப்படவில்லை.

கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஜிம்கானா மைதானம் வரை ஏரி மேல் ரோப் கார் அமைக்கும் திட்டம் ஏட்டளவில் உள்ளது. தனியார் நிறுவனம் இதை செயல்படுத்தி அவர்கள் முதலீட்டை லாபத்துடன் எடுத்த பிறகு அரசிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. இதுபோன்ற பல திட்டங்கள் பல்வேறு துறைகள் சார்பில் தொடங்கப்படாமலும், கோப்புகளாகவும் மட்டுமே உள்ளன.

ஹெலிகாப்டர் சேவை திட்டம்

இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் மேகமூட்டமாகக் காணப்படும். இதனால் ஹெலிகாப்டர் சரியாக இறங்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த ஆண்டு, தனியார் நிறுவனம் கொடைக்கானலில் ஒரு வாரம் ஹெலிகாப்டர் சேவையை நடத்தியது. அதன் பிறகு கொடைக்கானல் வரவில்லை. ஹெலிகாப்டர் கட்டணம் பல மடங்கு இருக்கும் என்பதால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

எனவே, கொடைக்கானலில், சாமானிய மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் வாய்ப்புள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT