செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான் விண்கலம், வெற்றிகரமாக 7-வது ஆண்டை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
மங்கள்யான் திட்டத்தில் அனைத்துவித அம்சங்களும் எதிர்பார்த்ததைவிட சாதகமாகவே அமைந்துள்ளன. இதில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள்தான் நமது எதிர்கால திட்டங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.
மங்கள்யானின் 5 ஆய்வு சாதனங்கள் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகின்றன. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் பருவநிலை மாறுபாடுகள், வளிமண்டல சூழல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தற்போதைய நிலவரப்படி விண்கலத்தின் ஆய்வுக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமாக தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள்தான் 7 முதல் 9 ஆண்டுகள் வரை செயல்படும்.
ஆனால், ஒரு விண்கலத்தையும் 7 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க வைக்க முடியும் என்பதை மங்கள்யான் நிரூபணம் செய்திருப்பது நமக்கு பெருமிதமான தருணமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.