சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 212 தேர்தல்வாக்குறுகிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு தேர்தல் பணிக்கான அலுவலகங்களை அச்சிறுப்பாக்கம், எல்.எண்டத்தூர் பகுதிகளில் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுகவைப் பொறுத்தவரை சொல்வதை செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். சட்டப்பேரவை தேர்தலின்போது 500-க்கும்மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 212 தேர்தல் வாக்குறுதிகளை 4 மாதத்தில் நிறைவேற்றியுள்ளோம்.
திமுக கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள். தற்போது அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த 3 பேர் ஊராட்சி மன்றத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது இந்த தேர்தல் வெற்றிக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 4 மாதத்தில் மக்களுக்கு அரசு செய்துள்ள திட்டங்களை கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றார்.
கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சம் காட்ட மாட்டோம். கடவுள் சொத்து கடவுளுக்கே என்பதை உணர்த்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.