வடக்குத்து ஊராட்சியில் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம், நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன். 
தமிழகம்

கரோனா தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வடலூர் பேரூராட்சி பேருந்து நிலைய வளாகம் மற்றும் வடக்குத்து ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகி யோர் முன்னிலையில் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறியது:

கடந்த 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 28 லட்சத்து 31ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இரண்டாம் முறையாக கடந்த 19-ம் தேதி 16 லட்சத்து 41 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் தமிழகம் முழுவதும் 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் நேற்று மாலை 6.30 மணி வரை 22 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனை. தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கரோனா தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழக முதல்வர் ஆர்வத்துடன் முகாம்களில் பங்கேற்பதால் அனைத்துத் துறையினரும் முன் நின்று நடத்தி இச்சாதனையை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 12-ம் தேதி நடைபெற்ற முகாம்களில் 88 ஆயிரத்து 890 பேருக்கும், 19-ம் தேதி 50 ஆயிரத்து 92 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.நேற்று நடைபெற்ற முகாம்களில் ஒரு லட்சத்தை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைந்து உள்ளனர்.

இதில் கடலூர் மாவட்டத்தில் 166 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார். பொது மருத்துவம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர் செல்வ விநாயகம், கடலூர் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மீரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT