தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதில் மக்கள் நலக் கூட்டணிக்கு தயக்கம் கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்கள் நலக் கூட்டணி உடையாது. அப்படிச் சொல்பவர்களின் கட்சிதான் உடையும். லஞ்சம், ஊழல், கமிஷன் வாங்குதல், வெளிநாட்டு முதலாளிகளை அழைத்து தொழில் தொடங்கச் செய்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும் திமுக, அதிமுகவுக்கு எதிராக, மக்கள் நலக் கொள்கைகளைக் கொண்ட 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியான இதை, யாராலும் உடைக்க முடியாது.
திமுக, அதிமுகவுக்கு எதிரான தேமுதிக, மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தாலும் சரி அல்லது அதனுடன் மக்கள் நலக் கூட்டணி சென்றாலும் சரி. எந்தவித கவுரவப் பிரச்னையோ, தயக்கமோ கிடையாது. குண்டர்களை வைத்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால், அரியலூர் விவசாயி அழகர் தற்கொலை செய்துள்ளார். இதேபோல, தஞ்சாவூர் விவசாயி பாலனை மிக மோசமாகத் தாக்கி, டிராக்டரைப் பறித்துச் சென்றுள்ளனர். இவ்விரு சம்பவங்களிலும் குண்டர்களை வைத்து, டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். குண்டர்கள் மூலம் கடன் வசூல் செய்யப்படுவதை தமிழக அரசுத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கடன் வசூலிப்பதற்கு கடன் தீர்ப்பாயம் உள்ளது. குண்டர்களையும், போலீஸாரையும் வைத்து வசூலிப்பது சட்டவிரோதம். இந்த சம்பவம் தமிழக அரசுக்கு மிகவும் அவமானகரமானது. பாலனைத் தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக தனியார் வங்கி மீது வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
கட்சியின் மாவட்டச் செயலாளர் ரா.திருஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், பாதிக்கப்பட்ட விவசாயி பாலன் உடனிருந்தனர்.