சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டது கட்சியின் உயிரோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:
தமிழக அரசின் செயல்பாடு அனைவருடைய எதிர்பார்ப்பையும் விஞ்சியுள்ளது. அமெரிக்காவில் நடந்த ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சில், அடுக்குமொழி மட்டும் இருந்ததே தவிர, வேறு எதுவும் இல்லை.
சரித்திர விபத்தால் முதல்வரான பழனிசாமி, இன்னொரு சரித்திர விபத்து ஏற்படாதா என்ற எதிர்பார்ப்பில் 2024-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என்று கூறுகிறார்.
2024-ல் மக்களவைத் தேர்தல் தான் வரும். அதிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் வரை ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றி பெற முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவு ஏற்படக்கூடாது என்பதற்காக பாஜக அரசு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதில், உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால், பாஜக எம்.பிக்களே அதிருப்தியில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் நிகழ்ந்த மோதல், காங்கிரஸ் கட்சியின் உயிரோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதை, கொஞ்சம் வேகமாக வெளிப்படுத்திவிட்டனர். இதை பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.