தமிழகம்

விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: புதுவையில் நாளை பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது

செ.ஞானபிரகாஷ்

விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது. மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதி்ர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகினற்னர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெற உள்ளது.

புதுவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பந்த் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாள் பிரச்சாரமும் நடைபெற்றது. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கட்சித்தலைவர்கள் வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளை சந்தித்து பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கோரியுள்ளனர்.

அத்துடன் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கியக்கட்சிகளின் மாநில நிர்வாகிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுனர்கள் சங்கம், மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டினர்.

இதுதொடர்பாக இக்கட்சிகளின் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, "நாளை புதுச்சேரியில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட், கடைகள் ஆகியவற்றை மூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடாது. தமிழகத்திலும் பந்த் நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் பஸ்களும், புதுச்சேரி வழியாக செல்லும் பஸ்களும் இயங்க வாய்ப்பில்லை.

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் , விவசாய சங்கங்கள் சார்பில் ராஜா தியேட்டர், அண்ணாசிலை, இந்திராகாந்தி சிலை, புதிய பஸ் நிலையம், ராஜீவ்காந்தி சிலை, தவளக்குப்பம், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

புதுச்சேரியில் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிகம்.

அதனால் புதுவையில் தனியார் பேருந்து உரிமையாளர் தலைவர் பாரதி கண்ணனிடம் கேட்டபோது, "பந்த் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு கேட்டுள்ளனர், இதனால் நாளை தனியார் பஸ்களை இயக்கமாட்டோம்" எனத் தெரிவித்தார்.

அதேபோல் பெரும்பாலான ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT