தமிழகம்

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐந்து இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

12.9.2021 அன்று நடைபெற்ற முதலாம் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், 21,48,526 முதல் தவணை தடுப்பூசிகள், 7,42,495 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 28,91,021 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

19.9.2021 அன்று நடைபெற்ற இரண்டாவது மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில், 10,85,097 முதல் தவணை தடுப்பூசிகள், 5,58,782 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 16,43,879 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (26.9.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1600 தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரயில் நிலையம், பட்டாளம்-தட்சணாமூர்த்தி திருமண மண்டபம், ஸ்ட்ராஹன்ஸ் ரோடு-சென்னை உயர்நிலைப் பள்ளி, அயனாவரம்-நேரு திருமண மண்டபம் மற்றும் அயனாவரம் சாலை-பெத்தேல் பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம், தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் .ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT