தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட 36 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் 6 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்கவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும் காவல் துறையில் நில அபகரிப்பு பிரிவை தமிழகஅரசு கடந்த 2011-ல் உருவாக்கியது.
இந்த வழக்குகளை விசாரிக்கதமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களும் தொடங்கப்பட்டன.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த அரசாணைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்புப் பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் விசாரணை மேற்கொள்ள தடை இல்லை என்றுஉத்தரவிட்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டிமற்றும் ரிஷிகேஷ்ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர், தனது நில அபகரிப்பு தொடர்பான புகாரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படாமல் இருப்பதால், பல ஆண்டுகளாக நிவாரணம்கிடைக்கவில்லை எனவும் புகார்தெரிவித்தார்.
விசாரணை தள்ளிவைப்பு
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் 36 சிறப்பு நில அபகரிப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நில அபகரிப்பு தொடர்பான தனது வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு மனுதாரர் 2012-ல் வைத்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா?’’ என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் விரிவான அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.