திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை முறையாக செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். காஞ்சிபுரத்தை அடுத்தசெவிலி மேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பங்கேற்று பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் முதியோருக்கு மாதம்தோறும் தரப்படும் ரூ.1,000 உதவித்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தித் தருவோம் என்றனர். அதேபோல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவோம் என்றனர். சமையல் காஸுக்கு ரூ.100 மானியம், கல்விக்கடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5 பவுனுக்கு கீழே உள்ள நகை அடமான கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
பயிர்க் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்றும் வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். திமுக அரசு அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றியுள்ளது.
அதிமுக அரசு, விவசாயிகள் பயிர்க் கடன்களில் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தது. தாலிக்கு தங்கம் 4 கிராமாக இருந்ததை 8 கிராமாக உயர்த்தி வழங்கினோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி அவர்கள் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கக் காரணமாக இருந்தோம். 52 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12ஆயிரம் மதிப்பிலான மடிகணினிகளை இலவசமாக வழங்கினோம்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ஏரிகளை தூர்வாரியதால் வேளாண்மை செழித்தது. நாம் செய்த நல்ல திட்டங்களால் மக்கள்மத்தியில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதிமுகஅரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாததால் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை இனி மக்கள் நம்பத் தயாராக இல்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறுக்குவழியில் வெற்றி பெற நினைக்கும். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படித்தான் வெற்றி பெற நினைத்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குப்பதிவின்போதும், வாக்கு எண்ணும்போதும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா,பா.பெஞ்சமின், மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.