மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் வரும் அக்டோபருக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோர அக்டோபர் 21-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டாலும் ஏரியில் தண்ணீர் இருப்பதால் குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும், ஏரியில் நீர் வற்றினால் மட்டுமே முழுமையாக தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 ஆயிரம் ஏக்கர் பாசனம்
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. இது தற்போது காஞ்சிபுரம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2,908 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 695 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இந்த ஏரிக்கு ஆரணி, செய்யூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து கிளியாறு வழியாகத் தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியின் மூலம் 26 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்பயன்பெற்று வந்தன. இந்த ஏரிகடைசியாக 1968-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது. இதனால் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்தும், விவசாய பரப்புகள் குறைந்தும் வருகின்றன. இந்நிலையில் இந்த ஏரியை தூர்வாரவேண்டும் என்று விவசாய சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்த ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த ஏரியை தூர்வார ரூ.125 கோடிக்கு திட்ட மதிப்பீடு மட்டுமே தயார் செய்து அனுப்பப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நேரத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அந்த நிதியும் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஏரி தூர்வாரும் பணி நடைபெறுமா என்று விவசாயிகள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்தன.
ஒப்பந்தப் புள்ளி
இந்த நிலையில் இந்த ஏரியை தூர்வார வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை ஒப்பந்தப் புள்ளிகள் கோர தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட பிறகு ஏரி தூர்வாரும் பணி நடைபெறும்.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஏரியில் தண்ணீர் இருப்பதால் ஒப்பந்தப் புள்ளிகள் பணி நிறைவடைந்தாலும், வரத்து வாய்க்கால்கள் தூர்வாருதல், பக்க கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்வோம். ஏரியை ஆழப்படுத்தும் பணி, நீர் வற்றிய பிறகே நடைபெறும்” என்றனர்.