திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே கொரட்டூர் பகுதியில் புதிய அணைக்கட்டு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
தமிழகம்

திருவள்ளூர் அருகே சேதமடைந்த கொரட்டூர் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணை அமைக்கும் பணி 85% நிறைவு

இரா.நாகராஜன்

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே 2015 மழை வெள்ளத்தின்போது சேதமடைந்த கொரட்டூர் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணைக்கட்டு அமைக்கும் பணியில் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக உருவாகும் கூவம், கடம்பத்தூர், மணவாள நகர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 72 கி.மீ.தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே திருவள்ளூர் அருகே 1879-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கொரட்டூர் அணைக்கட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது முற்றிலும் சேதமடைந்தது.

இந்த அணைக்கட்டுக்கு பதிலாக, புதிய அணைக்கட்டு அமைக்க தமிழக அரசு ஏற்கெனவே திட்டமிட்டது. அதன்படி, தமிழக நீர்வளத் துறை சார்பில், தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.32 கோடி மதிப்பில் புதிதாக கொரட்டூர் அணைக்கட்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மழைக்காலத்தில் கூவம் ஆற்றில் வரும் அதிகப்படியான நீரை தடுத்து, புதிய பங்காரு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்ப ஏதுவாக கூவம்ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பழமையான கொரட்டூர்அணைக்கட்டு, 2015 மழை வெள்ளத்தின்போது சேதமடைந்தது. இதையடுத்து, புதிய அணைக்கட்டு அமைக்கும் பணி கடந்த ஜனவரி முதல் நடைபெற்று வருகிறது.

சுமார் 35 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கக் கூடிய வகையில், 140 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரம் கொண்ட அணைக்கட்டு, 8 ஷட்டர்கள், 4 வெள்ள பாதுகாப்பு சுவர்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியில் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 15 சதவீத பணிகளை வரும் அக்டோபர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இந்த புதிய அணைக்கட்டு மூலம்மழைநீரை, விநாடிக்கு 3,600 கனஅடி அளவில் புதிய பங்காரு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்ப முடியும். அதுமட்டுமல்லாமல், புதுசத்திரம், ஜமீன் கொரட்டூர், கூடப்பாக்கம் உள்ளிட்டபல கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT