ராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களைக் காணும் வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல, பல்வேறு இடங்களுக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களைக் காணும் வகையில், தமிழகத்தில் இருந்து ராமாயண யாத்திரை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவ.18-ல் தொடக்கம்
இந்த ரயில் பயணம் வரும்நவம்பர் 18-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாகச் செல்கிறது.
ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாளம், ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்மபூமி, அயோத்தியில் ராமஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற இடங்களைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டணம் ரூ.14,490
மொத்தம் 14 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.14,490. இதில், ரயில் பயணக் கட்டணம், தங்கும் வசதி, வாகனப் போக்குவரத்து, சைவ உணவு ஆகியவை அடங்கும். இதில் பங்கேற்க விரும்புவோர் 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேணடும். கூடுதல் விவரங்களுக்கு 9003140680, 8287931977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.