தமிழகம்

கோவளம் கடற்கரை பகுதியில் திரவக் கழிவுகள் 100 சதவீதம் மறுசுழற்சி: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

செய்திப்பிரிவு

சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி சுமார் 1,076 கிமீ நீளம் கொண்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு இந்தியாவின் 9-வது நீலக்கொடி கடற்கரைசான்றிதழை டென்மார்க் நாட்டைச்சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கியுள்ளது. இந்த அமைப்புஉலகளவில் பாதுகாப்பு, துய்மையான கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து இந்த அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

கோவளம் கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வையாளர்களைக் கவர 37 வசதிகள் உள்ளன. இதில் பாதுகாப்பான நீச்சல் மண்டலம், உடைமாற்றுப் பகுதி, சாய்ந்திருக்கும் மூங்கில் நாற்காலிகள், நிழற்குடைகள், வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள், கழிப்பறை மற்றும் 7 நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மணலை சுத்தம் செய்யும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்கரை மணலும் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது.

கடற்கரையின் நீராடும் மண்டலத்தில் பாதுகாப்பாக நீந்தக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஆம்பிபியஸ் வீல் நாற்காலியும் உள்ளது. கடற்கரையில் குளிப்பதற்கான காலம் ஜனவரி 15 முதல் செப்டம்பர் 15 வரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக 4 கண்காணிப்பு சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த அவசர அழைப்புக்கும் உயிர்காக்கும் காவலர்கள் கண்காணிப்பு கோபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அங்கு உடனடி மருத்துவ கவனிப்பும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 60 எல்இடி ஒளிரும்தெரு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கடற்கரை, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். குளியல் மண்டலத்தில் தூய்மையான நிலையில் நீர் பராமரிக்கப்படுகிறது.

இந்த கடற்கரை, ஒரு பூஜ்ஜிய திரவ கழிவு மேலாண்மை கடற்கரையாக உள்ளது. இங்கு உருவாகும் திரவக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு 100 சதவீதம் மீண்டும்பயன்படுத்தப்படுகிறது. அவற்றைவெளியில் விட்டு மாசுபடுத்தப்படுவதில்லை. அங்கு இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 40 கிலோவாட் சூரிய மின் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 50 கிலோ செயலாக்க திறன் கொண்ட தானியங்கி உரம் தயாரிக்கும் இயந்திரம் கொண்ட திடக்கழிவு மேலாண்மை அலகும் உள்ளது.

SCROLL FOR NEXT