மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். 
தமிழகம்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது? - மதுரையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயி லில் வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அதிகாரிகளோடு ஆலோசித்து வருகிறோம். அதன் முடிவுகளை விரைவில் தெரிவிப்போம். அழகர்கோவில் மலைமேல் செல்லும் பாதையை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறினார்.

ராமேசுவரம்

பின்னர் ராமேசுவரம் சென்ற அமைச்சர் சேகர்பாபு, ராமநாதசுவாமி கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ராமநாதசுவாமி கோயிலில் 1 தங்கத்தேர், 1 வெள்ளித்தேர், 3 மரத்தேர்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. இத்தேர்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவல் குறைந்ததும் 22 தீர்த்தங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை 3 மண்டலங்களாகப் பிரித்து 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணி நடைபெறும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT