தமிழகம்

தென் மாவட்டங்களில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரிப்பு: உ.வாசுகி திடுக்கிடும் தகவல்

செய்திப்பிரிவு

தென் மாவட்டங்களில் கூலிப்படைகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆணவக் கொலை வன் மையாகக் கண்டிக் கத்தக்கது. இந்த சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் முகநூல், வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக சீர்திருத்தப் புரட்சி நடைபெற்ற தமிழகத்தில் ஒரு பெண், ஒரு ஆணை மணமகனாகத் தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்க சிந்தனையுமே இதற்கு காரணம்.

சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் சேர்த்துக் கொண்டால், அது அவர்களின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாய் அமைந்துவிடும். அதனால், அவர்களை புறக்கணிக்க வேண்டும். அதிமுக அரசு ஒருபுறம் தாலிக்குத் தங்கம் கொடுக்கிறது. மறுபுறம் டாஸ்மாக்கால் பல இளம்பெண்களின் தாலி கழுத்திலிருந்து இறங்குகிறது.

தென் மாவட்டங்களில் கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஊழலைப் பொறுத்தமட்டில் திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான். 2-ஜி அலைக்கற்றை முறைகேட்டில் திமுகவைச் சேர்ந்தவர்கள் திகார் சிறையிலும், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையிலும் இருந்து வந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக கிரானைட் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த காலத்தில் திமுகவும், அதிமுகவும் தான் மாறிமாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கிரானைட் முறைகேடு குறித்து, திமுக தலைவர் கருணாநிதி மவுனம் சாதிக்கிறார். மதுரையில் சனிக்கிழமையன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட 13 அமைப்புகள் இணைந்து சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடின. இதற்கு அனுமதி கேட்க கரிமேடு காவல்நிலையத்துக்குச் சென்றபோது அவர்கள் அரசியல் பேசக்கூடாது எனக் கூறியுள்ளனர். பெண்கள் என்றால் அரசியல் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏதாவது கூறியுள்ளதா? பெண்களை பாதிக் கின்ற பிரச்சினைகள் குறித்து பேசும்போது அரசியல் குறித்து பேசவேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.

போலீஸார் மறைமுக நெருக்கடி

அவர் மேலும் கூறியது: தேர்தல் ஆணையம் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்துள்ளது. ஆனால், மதுரை செல்லூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை இரவு 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என காவல்துறை கூறியுள்ளது. இதுபோல காவல்துறை மறைமுகமாக இடதுசாரிக் கட்சிகள், மக்கள் நலக்கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களின் நேரத்தைக் குறைப்பது கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாகும். காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்

SCROLL FOR NEXT