செட்டிப்பட்டு கிராமப் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி, பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர் பதவியைப் பொதுப் பிரிவிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தவறினால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு 3 கட்டங்களாக வரும் அக்டோபரில் நடக்கிறது. இதையொட்டி கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செட்டிப்பட்டு கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சாயத்தில் செட்டிப்பட்டைச் சேர்ந்த 1,958 வாக்காளர்களும், மணலிப்பட்டைச் சேர்ந்த 1,040 வாக்காளர்களும் என மொத்தம் 2,998 வாக்காளர்கள் உள்ளனர். பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் மட்டும் உள்ளன.
எனவே அதிக வாக்காளர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தில் செட்டிப்பட்டு, மணலிப்பட்டு கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால், மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனைக் கண்டித்து, உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள செட்டிப்பட்டு, மணலிப்பட்டு கிராம மக்கள், தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக இன்று (செப். 25) கிராம நுழைவு வாயில்களில் உள்ள கிராமப் பெயர்ப் பலகையில் கருப்புக் கொடி ஏற்றியும், தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இரண்டு கிராமங்களில் அதிகப்படியான வாக்குகள் உள்ள பொது மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கு கவுன்சிலர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இல்லையெனில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்தனர்.
இதற்கு, போலீஸார் தங்களது கோரிக்கையை மனுக்களாக அளித்தால், அதனை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.