எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே வழியாக இருக்கும் என்று தமிழக அரசிடம் விசிக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி - முருகேசன் சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரை ஆணவப் படுகொலை செய்த வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். அதேவேளையில், மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும்” என அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்
ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறியவேண்டும்: அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்; செய்தி கிடைத்ததும் டிஎஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்; அதையும் மீறி சாதிப் பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151-ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிவாரண நடவடிக்கைகள்
தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதி பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141,143,503 மற்ரும் 506-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரைப் பதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லவேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தம்பதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் தொடங்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்கவேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவதற்கான பாதுகாப்பைக் காவல்துறை தரவேண்டும்; தங்களது திருமணத்தை கவுரவத்தின் பெயரால் சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்.பி.க்கு அறிக்கை அளிக்கவேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்.பி. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிடவேண்டும்.
தண்டனை நடவடிக்கைகள்
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிபடையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்.
இவ்வாறு கூறியிருக்கும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கடந்த அதிமுக ஆட்சியின்போது விசிக சார்பில் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
அண்மையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு கூட்டத்தில் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டுமென்றால் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதொன்றே வழியாக இருக்கும்
எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் ஆணவக் கொலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறைக்குத் தமிழக முதல்வர் உறுதியான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்”.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.