தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து திருநெல்வேலியில் நேற்று மாலை அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தொடங்கின.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 16-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று மதியம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே திருநெல்வேலியில் அதிகாரிகள் களத்தில் இறங்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் கிழித்து அகற்றப் பட்டன.
இதுபோல் ஆட்சியர் அலுவ லக சுற்றுச்சுவரில் வரையப் பட்டிருந்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக் கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற் றன. தொடர்ந்து மாநகர பகுதிகளில் உள்ள கட்சி விளம்பர பதாகைகள், விளம்பரங்களை அகற்றும் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அலுவலகங்களில் அதிமுக அரசின் சாதனை விளக்க பலகைகள், முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தேர்தல் தேதி நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என் பதை அறிந்த ஆட்சியர் மு. கருணாகரன், பிற்பகல் 2.30 மணியளவில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 160 மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு ரூ.7.50 லட் சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.