புகையிலை பயன்பாட்டைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பெரும் துயரங்களை மக்கள் அனுபவிக்கின்றனர். நோய்கள் மூலம் தனிநபர் மட்டுமல்ல, அவரது குடும்பமே பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, புகையிலை பொருள்கள் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இந்தச் சூழலில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளில் 85 சதவீத எச்சரிக்கை படங்களுடன் கூடிய வாசகம் இடம் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதனை உறுதியாக கடைப்பிடித்து புகையிலை பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறினார்.