சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘இயற்கை வளங்களான மலை, குன்றுகளையும் விளம்பரம் என்ற பெயரில் சேதப்படுத்துகின்றனர். அரசின் பொதுச் சொத்துக்களான பாலங்கள், அரசு சுவர்களிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. நடைபாதைகளையும், ரோட்டையும் மறைத்து விளம்பர போர்டுகள், கட்சி பேனர்கள் வைக்கின்றனர். இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்’’ என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இயற்கை வளங்களின் அழகைக் கெடுக்கும் வகையில் பொது இடங்களில் உள்ள விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்துறை முதன்மை செயலர் தலைமையில் 5 பேர் அடங்கிய கமிட்டியை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளதாக, கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரசு உத்தரவை சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள் மற்றும் அரசு சொத்துகளான பாலங்கள், அரசு சுவர்கள், கட்டிடங்களையும் விளம்பரம் என்ற பெயரில் விட்டுவைக்கவில்லை.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தோம். ஆனால் அரசு செயலர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
தேர்தல்ஆணையத்தின் உத்தரவை அடுத்து இப்போது வேண்டுமென்றால் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் இந்நிலை தேர்தலுக்குப் பிறகும் தொடர வேண்டும். ரோடுகள், நடைபாதைகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பதால் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு தற்போது அமைத்துள்ள கமிட்டி, இயற்கை வளங்களின் அழகைக் கெடுக்கும் வகையில் மலை, குன்று மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் யாரும் விளம்பரம் செய்யாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்வதை தடுத்து இந்த நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.